×

அதிகாரிகளின் மாறுபட்ட உத்தரவுகளால் டாஸ்மாக் ஊழியர்கள் சிக்கி தவிப்பு

சென்னை: கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய அரசு ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியது. இதனால், தமிழகத்தில் ஏப்ரல் 14ம் தேதி வரை டாஸ்மாக் கடைகள் மூடப்படுவதாக அரசு அறிவித்தது. இந்நிலையில், டாஸ்மாக் கடைகளில் உள்ள மதுபானங்கள் திருடப்படுவதை தடுக்க அவற்றை குடோன்கள் மற்றும் திருமண மண்டபங்களுக்கு இடமாற்ற வேண்டும் என டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டது. ஆனால், இந்த உத்தரவை பின்பற்றாமல் ஊழியர்களுக்கு மாறுபட்ட உத்தரவுகளை அதிகாரிகள் பிறப்பித்து வருவதாக ஊழியர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இதுகுறித்து டாஸ்மாக் ஊழியர்கள் கூறியதாவது: மதுபானங்களை இடமாற்றம் செய்வது குறித்து கடந்த வாரமே நிர்வாகம் உத்தரவை பிறப்பித்தது. அதன்படி, அருகில் உள்ள குடோன்கள் மற்றும் திருமண மண்டபங்களில் மதுபானங்களை வைக்க சில மாவட்டங்களில் மட்டுமே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். பெரும்பாலான மாவட்டங்களில் மதுபானங்களை இடமாற்றம் செய்ய போதிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.

இதேபோல், நிர்வாகம் அறிவுறுத்திய இடங்களை தவிர வேறு இடங்களில் மதுபானங்களை மாற்றி வைக்கவும் மாவட்ட மேலாளர்கள் அறிவுறுத்தி வருகின்றனர். இதனால் மதுபானங்கள் கொள்ளை போக வாய்ப்புள்ளது. டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களை இடமாற்றம் செய்யும் வரை அந்த கடைகளில் வேலை செய்யும் ஊழியர்கள் இரவு முழுவதும் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும் எனவும் கட்டாயப்படுத்துகின்றனர். இது ஊழியர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இப்பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கு முறையான பாதுகாப்பு வசதிகள் செய்யப்படுவதில்லை. சானிடைசர், முகக்கவசம் போன்றவை ஏதும் கொடுக்கப்படவில்லை. இவற்றை ஊழியர்களே விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலை உள்ளது. முறையான பாதுகாப்பு ஏற்பாடு இல்லாததால் கொரோனா தொற்று வேகமாக பரவுவதற்கும் வாய்ப்பாக அமைந்து விடுகிறது. எனவே, டாஸ்மாக் ஊழியர்களுக்கு முறையான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து தர அரசும், டாஸ்மாக் நிர்வாகமும் முன்வர வேண்டும் என்றனர்.

Tags : Task staff ,boss , Task staff , stuck , varying orders ,authorities
× RELATED திருமணம் செய்துகொள்வதாக கூறி மோசடி...